ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இராஜ இராஜ சோளன் கல்லறையும் தமிழர்களுடைய வரலாற்றுப் பண்பாடும். – உமா


தஞ்சை பிரகதீஸ்வரர் பெரிய கோவிலையும் இன்னும் சுமார் 52 சிறிய பெரிய கோவில்களையும் கட்டிய இந்த மாமன்னர் இறையடி சேர்ந்த இடம் உடையனூர். அது கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.
அவர் இறையடி சேர்ந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மாத்திரம் இருக்கிறது. அதனுடைய அருகில் ஒரு மாட்டுத் தொழுவமும் நுளைவாயினில் அவரைப் பற்றிய சிறு குறிப்பு அடங்கிய மரப் பலகையும் இருக்கிறது.
ஓரு முதியவர் தினமும் விளக்கேற்றி வழிபடுகிறார். இராஜ இராஜ சோளனின் கல்லறை பொலிவிழந்து காணப்படுகிறது. மைசூர் மன்னர்கள் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் கல்லறைகள் மிகவும் சிறப்பாகக் கர்நாடகத்தில் பேணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகள் இந்தக் கல்லறைகளை பக்திபூர்வமாகத் தரிசிக்கிறார்கள். சோளவம்ச மாமன்னனின் நினைவாக ஒரு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும்.
எமது பண்பாட்டுச் செய்திகளை பதிவு செய்வது மூலம் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு மிகவும் குறைவு என்ற விமர்சனத்தில் உண்மை இருக்கிறது.
தமிழகத்தில் நடந்த களப்பிரர் ஆட்சி, வலங்கை சாதி, இடங்கை சாதி, வடக்கில் இருந்து வந்த மொகலாய ஆட்சி பற்றிய செய்திகளும் நிகழ்கால செய்திகளும் பதிவு செய்யப்படவில்லை.
பல்லவர் அரச வம்சம் பற்றிய தோற்றம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அவர்கள் யார் எங்கிருந்து வந்தவர்கள். அவர்களுடைய தாய்மொழி என்ன போன்ற விடயங்களுக்கு முடிவு கட்டப்படவில்லை.
அயல் நாடான இலங்கையில் சிங்களவர்கள் நெடுங்காலம் தொட்டு இன்றுவரை மகாவம்சம் என்ற வரலாற்றுப் பதிவைத் தொடர்ச்சியாகச் செய்கிறார்கள். தமிழ் நாட்டு மன்னர்கள் வரலாற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அவை உதவியுள்ளன.
மகாவம்சத்தில் சில இடங்களில் பொய்யும் பிரசாரமும் இருக்கலாம். ஆனால் பதிவு செய்யும் பாரம்பரியத்தைப் பாரட்ட வேண்டும். எம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் இராஜ இராஜ சோளன் என்ற உண்மையையை நூறு வருடத்திற்கு முன்பு ஒரு ஆங்கிலேயர் தான் கண்டுபிடித்தார்.
வரலாற்றுச் சம்பவங்களை ஆவணப்படுத்தும் பழக்கத்தை நாம் இனியாவது மேற்கொள்ள வேண்டும். இவை தமிழினத்திற்கு உத்வேகத்தையும் பெருமிதத்தையும் வளர்க்க உதவும் என்பதில் ஐயமில்லை.
ஓரு மொழியின் பயனீடு பேச்சிலும் எழுத்திலும் குறையும் போது அம்மொழியைச் சார்ந்த இன அடையாளங்கள் மெதுவாக அழிகின்றன. தமிழ் மொழியின் சிதைவு தமிழர்களின் சிதைவுக்கு முன்னோடியாகும்.
மணிப்பவழ உரை நடைக்கு நிகரான சேதத்தை ஆங்கிலம் கலந்த தமிழ் விளைவிக்கிறது. வட மொழிக் கலப்பால் வந்த அழிவு ஆங்கிலக் கலப்பால் வரும் என்பது நிட்சயம்.
தமிழ் மொழியின் சிதைவு தமிழர்களின் தமிழ்ப் பற்றின்மையால் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தேவநேயப் பாவாணர் எழுதிய “தமிழ் வரலாறு” என்று நூலில் காணலாம். தமிழர்களுடைய வரலாற்று உணர்வும் மிகக் குறைவு.
சோளர் ஆட்சி பற்றிய முழமையான ஆராய்ச்சி தேவைப்படுகிறது. எமது பல்கலைக் கழகங்கள் ஒன்றில் சோளர் வரலாற்று ஆட்சிப் பிரிவு உருவாக்கப்பட்டு தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆய்வுகள் அடங்கிய வெளியீடுகளும் பிரசுரிக்கப்பட வேண்டும். இவை தமிழினத்தின் சிந்தனை ஊற்றாக அமையும் என்பது உறுதி.
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த இராஜ இராஜ சோளனின் மெய்க்கீர்த்தி பார்வைக்குக் கிடைக்கிறது. அது பின்வருமாறு
“ திருமகள் போலப் பெருநிலச் செவ்வியும்
தனக்கே உரிமை பண்டமை மனக்கொள்க
காந்தளுர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்கை பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கங்கைமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீராயிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்”
மலாயாவின் கடாரம், இப்போது கெடா, பூஜொங் பள்ளத்தாக்கில் இராஜ இராஜ சோளன் வந்திறங்கியதாக வரலாறு உண்டு. இந்த உண்மை மறைக்கப்பட்டுள்ளது. பூஜொங் பள்ளத்தாக்கின் மண்ணடியில் கோவில்கள், பிற கட்டுமானங்களின் கற்சான்றுகள் புதையுண்டு கிடக்கின்றன. மலாயா அரசிற்கு அக்கறை இல்லை. தமிழகம் அதில் ஆர்வமுடன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
கி.பி 10ம் நூற்றாண்டில் மாறன் மகா வங்சன் மலாயாவில் கால் பதித்தான். அவனுடைய மகள் பத்தினி சயாம், இப்போது தாய்லாந்து சென்று அங்கு பத்தினி என்ற பெயரில் நகரம் அமைத்தாள். இன்று அது பத்தானி என்று அழைக்கப்படுகிறது. கெடாவின் சுங்கைப் பட்டாணியும் பத்தானி என்பதின் திரிபாகும்.
நுனிப் புல் மேய்வோர் அங்கொன்றும் இங்கொன்றுமாக தகவல்களைத் திரட்டித்தரலாம். அது முழமையானதல்ல. துறைசார் நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அடையாளம், காலநிர்ணயம் போன்றவற்றைச் செய்யின் தமிழினம் பயனடையும்.

www.Tamilkathir.com
www.yarl.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக