வெள்ளி, 29 ஜனவரி, 2010

மியான்மார் 'சின்னத் தமிழகம்' கோயிலில் கும்பாபிஷேகம்

யாங்கோன்: மியான்மரில் உள்ள திருக்கம்பை வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் (மகா சம்ரோக்ஷனம்) கோலாகலமாக நடந்தது.


மியாமார் நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் 'சின்னத் தமிழகம்' என்று போற்றப்பெறும் திருக்கம்பை உள்ளது.

அங்குள்ள ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோக்ஷணம் கடந்த 27ம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து ஏழு பட்டாச்சாரியார்கள் 22ம் தேதி முதல் விசேஷ யாக பூஜைகளை தினமும் நடத்தி, விக்கிரக பிரதிஷ்டைகள் செய்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்தது. மாலையில் திருத்தேர் உலாவும் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

பர்மா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது இரங்கூன் முனிசிபல் காண்டிராக்ட் தொழிலதிபர் வேங்கடசாமி நாயகர் 1904ம் ஆண்டு தமிழக ஸ்தபதிகளைக் கொண்டு இக்கோயிலை எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினார்.

சைவ-வைணவத் தலங்கள் நிறைந்திருப்பதாலும், திருத்தேர்கள் உலா காண்பதாலும் இவ்வூரை திருக்கம்பை என தமிழறிஞர் கி.வா.ஜ பெயரிட்டு போற்றினார்.

படங்களுடன் இச்செய்தியை நமக்கு அளித்தவர் சோலை. தியாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக