
அறிவால் உணர்ந்து மறுபடியும் ஓத முடியாத உன்னதம் கொண்டது மணிவாசகர் தழிழ் அறிவு..
.
.
.
.
.
.
.
.
.
.
உலகத்தில் கடினமான பணி, மணிவாசக சுவாமிகளின் ஆற்றலை படித்தும், கேட்டும் உள்ளபடி புரிவது, ஆனால் அதைவிடக் கடினமான பணி அவரது அறிவாற்றலை மற்றவருக்கு விளங்கும்படியாக எடுத்துரைப்பது.
கடவுளை எப்படி எடுத்துரைப்பது.. ? உலக அறிஞர்களுக்கு இதுதான் மிகப்பெரிய சவால். அதனால்தான் இறைவனை உலகெலாம் உணர்ந்து ஓதுவதற்கு அரியவன் என்றார் சேக்கிழார்.
அப்படிப்பட்ட ஓத முடியாத இறைவனை தன் தமிழால் ஓத முடியுமென்று காட்டியவரே மணிவாசகர்.
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே..! – இது கடவுளுக்கு அவர் தந்த விளக்கம்.
ஆழத்தின் கடைசி அந்தத்தில் இருக்கும் அணு.. அதே அணு அகலத்தின் கடைசியான ஈர் அந்தங்களாகவும் இருக்கும், அது கூர்முடியின் கடைசிக் கூர்மையாகவும் இருக்கும்.
மூவாயிரம் பக்கங்களில் எழுதினாலும் விளங்க முடியாத பரம்பொருளை மூன்றே மூன்று சொற்களில் சிறைப்பிடித்த மேதை.
அவர் எழுதிய திருவாசகத்தில் இருக்கும் ஒவ்வொரு சொற்களும், ஒவ்வொரு வாசகமும் படிக்கப் படிக்க அறிவின் மீது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
திருக்கோவையாரின் நானூறு பாடல்களையும் படித்து முடித்தால் உள்ளம் ஊமையாகிவிடும். காரணம் திருக்கோவையார் மற்றவரால் விண்டுரைக்க முடியாத விந்தை. இப்படி விபரிக்க முடியாத விந்தைகளை எல்லாம் உலகிற்கு விபரித்த மேதை..
மணிவாசகரை தமிழ்நாட்டில் இருந்து பார்த்தவர்கள் அவரை இந்திய உச்சங்களுக்கு வெளியால் கொண்டு செல்ல முடியாதவர்களாகிவிட்டார்கள்.
ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த கிறீத்தவமத பாதிரியாரான ஜி.யு.போப் தமிழைக் கற்று, மணிவாசகரின் வாழ்வையும், பாடல்களையும் படித்தபோது அசந்து போய்விட்டார்.
அதனால்தான் பாதிரியாரான ஜி.யு.போப் மணிவாசகரின் தமிழ் இன்பத்தில் கலந்து, தமிழகத்திலேயே இறந்து, தமிழ் மண்ணிலேயே புதைய வேண்டுமென்று அங்கேயே புதைந்து, தனது கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் இங்கே உறங்குகிறான் என்று எழுதிவிட்டு உறங்கினார்..
மேலை நாட்டு அறிவியலோடு அவரைப் பொருத்திப்பார்த்த ஜியு.போப்பின் உள்ளத்தில் தட்டிய பொறியின் வெளிச்சத்தில் மணிவாசகரை நாம் ஒரு நொடி பார்த்தால் ஆற்றின்ப வெள்ளமாக அந்த ஒளியின் பிரவாகித்துப் போய்க்கொண்டே இருப்பது தெரியும்.

அப்படி அவரிடம் நாம் காணும் அறிவும் ஆற்றலும்தான் என்ன..?
வாருங்கள் முதலில் அமெரிக்கா போவோம்..
இரண்டாவது உலக யுத்தம் பொறிகக்கி பறந்து கொண்டிருக்கிறது…
அணு குண்டை உருவாக்க விஞ்ஞானி ஓபன்ஹீமர் தலைமையில் ஐன்ஸ்டைன் உட்பட முன்னூறுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..
அவர்களுடைய போராட்டத்தில் உருவாக்கப்பட்ட முதல் அணு குண்டின் பெயர் ஒன்றில் மூன்று..
மணிவாசகர் இறைவனை வடிவமைத்த ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே என்ற மூன்று புள்ளிகளை காலம் அந்த அணு குண்டுக்கு வைக்கிறது..
ஒன்றில் மூன்று..
திரிசூலம்… முக்கண்ணன்.. சிவன்..
அதே அணுவைப் பிளந்தால்..
எலக்ரோன் – நியூட்டோன் – புரோட்டோன்… ஓர் அணுவிற்குள் மூன்று விசைகள்..
மாணிக்கவாசகர் அகலம் என்று சொல்லியிருக்கிறாரே.. ஆழம் ஒரு புள்ளி சரி, கூர்மை இன்னொரு புள்ளி சரி, ஆனால் அகலத்திற்கு இரண்டு புள்ளிகள் அல்லவா.. எப்படி மணிவாசகரின் கருத்தை மூன்று புள்ளிகளாக கருத முடியும் என்ற கேள்வி எழுகிறது..
அந்த மூன்றில் ஒன்றான புரோட்டோனுக்குள்தான் கடவுள் துகள் என்ற அணுத்துகள் புதைந்து கிடக்கிறது.. அது மற்ற அணுத்துகள்களை விட 250.000 மடங்கு அதிக நிறை கூடியது.. அகன்றது..
கருஞ்சுழி..
மகாவெடிப்பு..
பிரபஞ்சத்தின் தோற்றம் எல்லாமே அதுதான்..
சமீபத்தில் சுவிஸ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட மாபெரும் அறிவியல் புரட்சியால் உறுதி செய்யப்பட்ட கடைசி உண்மை.

இனி அணு குண்டுக்கு வருவோம்..
அணு குண்டை உருவாக்கிய தலைமை விஞ்ஞானி ஓபன்ஹீமரின் வாழ்க்கை வரலாற்றில் இப்படியொரு குறிப்பு வருகிறது..
அணு குண்டை வெடிப்பதற்கு முன்னர் கிறீத்தவரான அவர் கனவில் முன் அறியாத சக்தியொன்று வருகிறது, அணு குண்டை வெடிக்க வேண்டாம் என்று மன்றாடுகிறது..
தன்னுடைய பூமியில் அணு குண்டு வீசும் யுகத்தை உருவாக்க வேண்டாம் என்று தடுக்கிறது.. தன் கனவில் வந்த முக்கண்ணன் யார்..? திடுக்கிட்டு விழிக்கிறார் ஓபன்ஹீமர்…
மூன்று கண்களை உடைய அந்த சக்தி எது..? அவர் உள்ளம் அலை மோதுகிறது.. மணிவாசகரை குருந்த மரநிழலில் தடுத்தாட்கொண்ட அந்த இறைவனால் அன்று அவர் தடுத்தாட்கொள்ளப்படுகிறார்.
ஆம்..! வேகம் தடுத்தாண்ட வேந்தன் அங்கும் சென்றான்..
அன்றே ஓபன்ஹீமர் அணு குண்டை உருவாக்கும் பணியிலிருந்து மெல்ல விலக ஆரம்பிக்கிறார்… முதல் இரண்டு அணு குண்டுகள் ஜப்பானில் வீசப்பட்ட பின்னர்.. விஞ்ஞானிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில், அமெரிக்காவின் விஞ்ஞானம் தனது கரங்களில் இரத்தத்தை பூசிக்கொண்டு நிற்கிறது என்று அவர் வெளிப்படையாகப் பேசி பரிசை வாங்க மறுக்கிறார்.
அவருக்கு அமெரிக்க அரசு துரோகிப் பட்டம் கட்டுகிறது.. ரஸ்ய உளவாளி என்கிறது.. ஆனால் ஓபன்ஹீமர் தனது கருத்தை இறுதிவரை மாற்றவில்லை.
இவருக்கு 1200 வருடங்கள் முன்பே போருக்காக குதிரை வேண்ட சென்ற மணிவாசகரை கனவில் தோன்றி அதே முக்கண்ணன் தடுக்கிறார்.
மணிவாசகர் பாண்டிய மன்னனின் தலைமை அமைச்சராக இருந்தவர். போருக்காக குதிரை வாங்க மன்னன் கொடுத்த பணத்தை எடுத்துச் சென்றபோது இந்தத் தடுத்தாட்கொள்வு நடக்கிறது. அவ்வளவுதான் ஞானம் பெற்ற மணிவாசகர் அப்பணத்தில் கோயிலைக் கட்டுவித்தார்.
அது மன்னன் பணமல்லவா.. அதை எடுப்பது குற்றமல்லவா..?

இல்லை.. அது மக்கள் வரியில் பெற்ற பணம்.. அப்பணத்தில் மக்களைக் கொல்லும் போர்களை நடாத்துவது தவறு..!
ஆனால் பணத்தை பணமாக மக்கள் கையில் கொடுப்பது தப்பு.. எனவேதான் ஆலயம் கட்டும் பணிக்கு செலவிடுகிறார்.
அன்றைய ஆலயங்கள் இன்றைய ஆலயங்களை போன்றவை அல்ல.. ஒரு தொழில் நுட்பக் கல்லூரி போல சமுதாயத்தையும், தொழில்களையும் வளர்த்த அறிவியல் கூடங்கள்.
மேலும் ஒரு மன்னன் தன்னுடைய செல்வத்தை போரில் கரைத்தால் அதைத் தொடர்ந்து மாபெரும் பொருளாதார மந்தம் வருமென்று தன் செயலால் உரைத்தவரும் மணிவாசகரே.. அக்காலத்து தொழிலாளர்கள், சிற்பிகளுக்கெல்லாம் அந்தப் பணத்தைக் கொடுத்து, ஆலயத்தை அமைத்தார்.
மணிவாசகரைப் போல,
ஈராக் போருக்கு செலவிட்ட பணத்தை நல்வழியில் பயன்படுத்தியிருந்தால் இன்றைய உலகப் பொருளாதார மந்தம் வந்திருக்காது.. அந்தப் பணத்தினால் பயங்கரவாதிகள் கூட அன்போடு திருந்தியிருப்பார்கள்.
மணிவாசகரைப்போல துணிச்சலும் தூரப் பார்வையும் கொண்ட அமைச்சர் ஒருவர் அமெரிக்காவில் பிறந்திருந்தால் யோர்ஜ் டபிள்யூ புஸ் உலகத்தை வளைகுடா போரில் சிக்குப்பட வைத்திருக்க மாட்டார்.
அது மட்டுமா.. போர்க் கருவிகளுக்கும், போருக்கும் பணத்தை செலவிட வேண்டாமென்ற மணிவாசகர் கொள்கையை உலக தலைவர்கள் புரிந்திருந்தால் இரு பெரும் உலகப்போர்களே நடந்திருக்காது.
இந்தப் போர்கள் மட்டும் நடந்திருக்காவிட்டால்..
இன்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆறு அறைகளைக் கொண்ட வீடும், ஆயிரம் பேருக்கு ஒரு வைத்தியசாலையும், வறுமையில்லாத வாழ்வும் கிடைத்திருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அரசின்பேராலும், சமயத்தின் பேராலும் மக்களை அழிக்கும் போர் முடிவுகளை எடுப்பது தவறு என்பதை தன் வாழ்வால் எடுத்துக் காட்டியவர் மணிவாசகர். ஆகவேதான் உயிர்க் கொலைக்கு உதவும் செயல்களை செய்ய மறுத்தார், வெறுத்தார்.
செய்தி அறிந்த அரசன் கோபமடைந்து, குதிரைகள் எங்கேயென்று கேட்டபோது சிவனே குதிரைப்பாகனாகி, காட்டிலுள்ள நரிகளை எல்லாம் பரிகளாகி, அழைத்து வருகிறார். நள்ளிரவானதும் குதிரைகள் மறுபடியும் நரிகளாகி எஞ்சிய குதிரைகளையும் கொன்றுவிடுகின்றன.
பாண்டிய மன்னன் போர்க்களஞ்சியத்தை அழித்து, போருக்கு எதிரான பிரகடனத்தை சிவனும் செய்கிறான்.
அந்த இடத்திலேதான் மணிவாசகர் இன்னொரு புரட்சிக் கருத்தை முன் வைக்கிறார்.
தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்கிறார்…
சமயச் சிந்தனையில் ஒரு புரட்சி.. ஏன் இந்த தென்னாட்டவர் பிரகடனம்..?
காரணம் உண்டு..
மணிவாசகர் திருஞானசம்மந்தர், அப்பர் காலத்திற்கு பிற்பட்டவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சம்மந்தர் காலத்தில் பாண்டிய மன்னனால் எண்ணாயிரம் சமணர்கள் கழுமரமேற்றப்பட்டதாக விக்கிபீடியாவில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்டுள்ளது.
இந்தக் கொலைகள் வடநாட்டு சமயக் கொள்கைகள் சார்ந்தவை. சமயப்படுகொலைகள் தென்னாட்டிற்கு உகந்தவை அல்ல.. சமயக்கொலைகளை யார் செய்தாலும், அது குற்றச் செயலே..
ஆகவேதான் அந்தக் கழுமரமேற்றிய களங்கத்தில் இருந்து சிவனை விடுவிக்க வேண்டிய தேவை அவருடைய தமிழுக்கு ஏற்படுகிறது.
மேலும்..
நடராஜன் என்கின்ற இந்தச் சிவன் ஒரு தமிழ் ஆடற் கலைஞன், அவன் தென்னாடாகிய தமிழகத்தில்தான் தோன்றியவன்.. அவன் தமிழருக்கு சிவனாகவும் மற்றவர்களுக்கு இறைவனாகவும் நிற்கிறான் என்றும் முழங்கினார்..
தென்னாட்டிலே தோன்றிய தமிழனான சிவனுக்கு வடமொழியாம் சமஸ்கிருதம் எதற்கு என்ற கேள்விக்கு ஒரு முதலமைச்சராக மணிவாசகர் கொடுத்த பதில் இது.
அரசு என்ற தாபனத்தை உடைத்து…
வட இந்திய பிராமணிய ஆதிக்க கொள்கைகளை நிராகரித்து..
சிவனை தென்னாட்டவனாக்கிய மணிவாசகரை பெரிய புராணத்தால் அமைதிப்படுத்தி பார்க் முடியாதளவுக்கு புரட்சிச் சிந்தனையாளராக இருந்தார்.

இப்படிப்பட்ட பேரறிஞனான மணிவாசகரை ஓர் அமெரிக்கனாகவோ இல்லை ஓர் ஐரோப்பியனாகவோ பிறக்க வைத்து உலகப் புகழ்பெற வைக்காது, தமிழகத்தில் ஏன் பிறக்க வைத்தான் அந்த சிவன் என்பதே முக்கிய கேள்வி..
அதற்கான பதிலை மணிவாசக சுவாமிகளே தருகிறார்…
தானே தென்னாட்டு தமிழனாக அவதரித்த சிவன் தன் அடியவனை தன்னைப்போலவே தென்னாட்டிலே அவதரிக்க செய்தது சிறப்பென்று கூறி, தென்னாடுடைய சிவனே என்கிறார்.
மணிவாசகர் வரலாற்றிலே இன்னொரு அரிய உண்மை கலந்திருக்கிறது..
பாண்டிய மன்னனை அடக்குவதற்காக வைகையை பெருக்கெடுக்க வைக்கிறார் சிவன்.. வைகை சுனாமி போல பெருகி வருகிறது.. அதை தடுக்க சிவனே பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி வாங்குகிறார்.. இந்தக் கதையை சற்று நுணுக்கமாக ஆராய வேண்டும்.
தப்பான செயல் நடக்கும் நாட்டில் இறைவன் சுனாமிபோல வெள்ளத்தை அனுப்புவான் என்ற செய்தி இங்கே பதிவாகிறது.. இதே செய்தி எகிப்திய வரலாற்றிலும் உண்டு.. இறைவனின் கோபமே நைல்நதியின் பெருக்கெடுப்பு என்கிறது.
2004ம் ஆண்டு இறைவன் கோபத்திலிருந்து சீறிய சுனாமி சிறீலங்காவிற்குள்ளும், இந்தியாவிற்குள்ளும் புகுந்தது.. இலங்கையில் நடக்கும் தப்பான போரை நிறுத்தி மக்களை அமைதியாக வாழ வழிவிடும்படி கேட்டது.. – இது இறைவனின் கோபம்.
யாருமே கேட்கவில்லை..! பரிசு… அழிவே மிஞ்சியது..
இரண்டு தடவைகள் அணு குண்டு விழுந்தும், அணு சக்தி விடயத்தில் எச்சரிக்கையில்லாதிருந்த ஜப்பானுக்குள் அதே சுனாமி சென்ற ஆண்டு நுழைந்தது.. அணு உலைகளை உடைத்து நாசம் செய்தது..
ஆம்.. !
ஜப்பானில் அணுவையும், சுனாமியையும் இணைத்து இறைவன் ஆடிய நாடகத்தை அறிந்தவர் யார்..? மணிவாசகரையும், ஒபன்ஹீமரையும், அந்த முக்கண்ணனையும் ஒப்பிட்டால் இந்த நாடகத்தின் தலைவன் அவனே.. என்ற உண்மை தெரியவரும்… அதேவேளை ஒபன்ஹீமரிடம் மன்றாடியதுபோல அந்த முக்கண்ணன் இனி யாரிடமும் மன்றாடமாட்டான் என்பதையும் உணர முடியும்..

இருப்பினும் ஒரு கேள்வி ஜப்பான் சுனாமி ஏற்படுத்திய அழிவு பெரியதல்லவா..?
ஜப்பானின் புக்குசீமா, டாக்சி அணு ஆலைகள் வெடித்திருந்தால் சேதம் இதைவிட பல மடங்கு இருந்திருக்கும். அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத குற்றத்திற்காக ஜப்பானிய பிரதமரே பதவி விலக நேர்ந்தது.
அடுத்த கேள்வி.. மணிவாசகர் என்ற பேரறிஞர் பிறந்த தமிழகத்திலே பிறந்த அப்துல் கலாம்தானே இந்திய அணுகுண்டை செய்தார் இது தமிழனுக்கு பெருமையா..?
இந்தக் கேள்வி ஒரு தமிழ் உள்ளத்தை வாட்டும் கேள்வியாகும்..
இதுவரை இந்திய அணு குண்டு வெடிக்கவில்லை.. அது எங்கோ ஒரு நாட்டில் வீசப்பட்டால்.. வெடித்தால்.. உலகம் யாருடைய பெயரை முதலில் உச்சரிக்கும்..?
அப்துல் கலாம்..!!
அடுத்து என்ன சொல்லும்…
அவன் ஒரு தமிழ் நாட்டவன் என்று சொல்லும்…
அடுத்து….?
மணிவாசகர் போன்ற பேரறிஞர்கள் தமிழுக்காகத் தேடிய புகழெல்லாம் ஒரே நொடியில் சுனாமி அடித்த வெள்ளத்தில் சிக்குண்டதுபோல அடித்து செல்லப்பட்டுவிடும்.
ஆம்..!
வட இந்தியனுடன் தமிழன் தொடர்பு வைத்தால் அவனுக்கு கிடைக்கும் பரிசு இதுதான்..
இதனால்தான் வட இந்திய தொடர்பை அறுத்து, தென்னாடுடைய சிவனே போற்றி என்றார் மணிவாசகர்.. அவருக்கு பின் அவருடைய இடத்தைப் பிடிக்க ஒரு முதலமைச்சரோ ஓர் அறிஞரோ இன்றுவரை தமிழகத்தில் தோன்றவில்லை என்பதை நாம் சொன்னால் அது காழ்ப்புணர்ச்சியாகிவிடும்..
திருவாசகத்தைப் படித்தால் அதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
இப்படித் தேடத் தேட ஆழ்ந்து அகன்று செல்லும் பேரறிவே மணிவாசகர்.
வாழ்க.. தமிழன் மணிவாசகன் ..!
வாழ்க.. உணர்ந்து ஓதுவதற்கு அரிய அவன் புகழ்..
நாளை மறுதினம்…
இறைவனால் நாவிலே தமிழ் கொடுக்கப்பட்ட திருநாவுக்கரசர்
கி.செ.துரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக