திங்கள், 16 ஏப்ரல், 2012

மியன்மாரின் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவில்

பல இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் என்று அழைக்கப்படும் பர்மாவில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரி மூனீஸ்வரர் கோவில் இந்த நாட்டின் மிகப் பிரசித்தமான இந்துக் கோவில்களில் ஒன்று.

இந்தக் கோவில் 150 வருடங்களுக்கு முன்பு யங்கொன் நகருக்கு அருகாமையிலுள்ள பீலிக்கன் கிராமத்தில் அங்கு குடியேறிய தமிழகத் தமிழர்களால் அமைக்கப்பட்டது. விவசாய முயற்சிகளுக்காகச் சென்ற தமிழர்கள் தமது வழிபாட்டுத் தெய்வங்களையும் எடுத்துச் சென்றனர்.

விசாலமான அரச மரத்தின் கீழ் திரிசூலத்தை நாட்டி அவர்கள் இந்தக் கோவிலின் தோற்றத்திற்கு உதவினார்கள். பெருந்தொகையான தமிழர்கள் வாழ்ந்த பீலிக்கன் கிராமத்தில் இன்று இருபது தமிழ் குடும்பங்கள் மாத்திரம் வாழ்கின்றன. தமிழர்கள் மாத்திரமல்ல மியன்மாரின் பிற இனத்தவர்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.

1962 மார்ச் 02ம் நாள் ஜெனரல் நீ வின் தலைமையில் பர்மிய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இராணுவ ஆட்சியில் தமிழர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டனர்.

பர்மா அகதிகள் கால் நடையாகச் சென்று தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். பலர் இந்தக் கோவில் மண்ணைச் சிறிய பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றனர். இந்த மண்ணை அடிக்கல் குழியில் போட்டுப் புதிய கோவில்களை தமிழ் நாட்டில் அமைத்தார்கள்.
Posted Image
அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் ஆலயங்கள் பாடிய நல்லூர், தஞ்சாவூர், என்னூர், வையாபாடி ஆகிய கிராமங்களில் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்ணை வைத்துக் கட்டப்பட்டுள்ளன.

மியன்மாரின் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவிலுக்கு அய்யர் கோவில் என்ற அழைப்புப் பெயர் உண்டு. அய்யர் கோவில் என்ற பெயர் தான் மியன்மார் வாழ் தமிழர்களுக்கும் பிற இனத்தவர்களுக்கும் அதிகம் தெரிந்த பெயர்.

இந்த கோவிலுக்கு நீதி நிலையம் என்ற காரணப் பெயரும் இருக்கிறது. தமக்கிடையிலான பிணக்குகளை இந்த சுற்றாடலில் வாழும் மக்கள் கோவில் மண்டபத்தில் பேசித் தீர்ப்பார்கள். கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்யும் வழமையும் உண்டு.

தீர்க்கப்படாத பிரச்சனைகளை தெய்வத்திடம் ஒப்படைக்கும் வழமையும் இந்தக் கோவிலில் காணப்படுகிறது. ஓவ்வொரு வாரமும் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விசேட பூசைகளும் நீதி வழங்கலும் நடக்கின்றன.

மார்ச் – ஏப்ரல் மாதங்களில் வரும் பங்குனி உத்தரத்தோடு பத்து நாள் உற்சவம் இந்தக் கோவிலில் நடை பெறுகிறது. அய்யர் கோவிலின் புனருத்தாரணம் 2002ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் பூர்த்தி செய்யப்பட்டது. கோவில் குடமுழுக்கு தமிழ் நாட்டில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அந்தணர்களால் நடத்தி வைக்கப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், தமிழ் நாடு ஆகியவற்றில் இருந்து பக்தர்கள் பெருந்திரளாக வந்தனர்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் ஒரு காலத்தில் பர்மா வர்த்தகத்தில் ஈடுபட்டனர். இராணுவ புரட்சிக்குப் பிறகு யாழ் – பர்மா தொடர்பு நின்றுவிட்டது. தேசியத் தலைவரின் தந்தை வழி முற்சந்ததியினர் பர்மா – வல்வெட்டித்துறை கப்பல் சேவை நடத்தினார்கள்.

www.Tamilkatir.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக