சனி, 24 டிசம்பர், 2011

தமிழில் எழுதிய நினைவுக் கல்லைக் காலியில் நாட்டிய சீன மாலுமி!-செண்பகத்தார்


சீனக் கடற்படையின் தற்கால இந்து மாகடல் பிரவேசம் பற்றி மிகவும் பரபரப்பாகப் பேசுவோர் ஒரு வரலாற்று உண்மையை மறந்து விட்டார்கள். பதினைந்தாம் நூற்றண்டின் முதல் இருபத்தியெட்டு ஆண்டுகளில் (1405-1433) மிங் பேரரசு ஏழு பாரிய சீனக் கடற்படைப் பயணங்களை இந்துமா கடலில் வழி நடத்தியது.
சீனக் கப்பல்கள் செங் ஹீ என்றும் செங் ஹோ (Zheng he, Zheng ho) என்றும் அழைக்கப்படும் கப்பல் தலைவன் தலைமையில் தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆபிரிக்கா ஆகிய பகுதி நாடுகளுக்கு பெரும் எடுப்பில் பயணங்கள் மேற்கொண்டன.கிறிஸ்தோப்பர் கொலம்பஸ் (Christopher columbus) (1451-1506) சமகாலத்தவராக இருப்பினும் பதினைந்தாம் நூற்றாண்டின் கடல் தொடர்பான உலக வரலாறு சீனாவுக்கே சொந்தம் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வரலாறு மேற்கு நாட்டவர்களால் எழுதப்படுவதால் சீனாவின் கடலாதிக்கத்தை நிலை நாட்டிய செங் ஹீயின் சாதனைகள் மறைக்கப்படுகின்றன. அண்மைக் கலத்தில் செங் ஹீ பற்றிய விழிப்பு உலகில் தோன்றியுள்ளது.
மிங் அரச பரம்பரை மேற்கொண்ட கடற் பயணங்களின் நோக்கம் சீனாவின் வலுவை வெளிக்காட்டுதல், நாடுகளுக்குச் சீனா பற்றி அறியச் செய்தல், பிற நாட்வர்களுக்குச் சீன நாகரீகம் தொட்டு அனைத்து அடையாளங்களையும் அறிமுகம் செய்தல், அரசுகளிடம் இருந்து பொன்னும் பொருளும் திறையாக வசூலித்தல், வர்த்தகத்தைப் பெருக்குதல் என்று குறிப்பிடப்படுகிறது.
இவை அனைத்தையும் செங் ஹீ தலமையிலான கடற்படை செம்மையாகச் செய்ததாக அவர் பற்றிய ஆய்வுகள் கூறுகின்றன. இவர் இனத்தால் சீனர், மதத்தால் இஸ்லாமியர. சிறுவயதில் அவர் விதை அகற்றப்பட்ட அலி ஆக்கப்பட்டார். அதன் பிறகு அரண்மனை சேவையில் இணைக்கப்பட்டார். வீர தீரச் செயல் புரிந்த காரணத்தால் அவருடைய செல்வாக்கு உயர்ந்தது.
செங் ஹீ தேர்ச்சி பெற்ற கடற்படைத் தலைவன், புதிய நாடுகளைக் கண்டுபிடித்தவர், இராணுவ நவடிக்கையில் வல்லோன், சிறந்த இராசதந்திரி என்று அவர் பற்றிக் கூறப்படுகிறது. எதிரிகளை தலை குனியச் செய்ய கடலில் கொண்டு சென்ற இராணுவத்தையும் நுட்மான இராசதந்திரத்தையும் பயன் படுத்தினார். திறை வசூல் மூலம் சீனாவின் செல்வப் பெருக்கிற்கு உதவினார்.
சுமாத்திரா தீவில் நடந்த ஆட்சிக் கலகங்களை அடக்கி அமைதியை ஏற்படுத்தினார். அரேபியாவிலும் கிழக்கு ஆபிரிக்காவிலும் இராணுவ பலத்தைக் காட்டி சீன மேலாதிக்கத்தை உறுதி செய்தார். இலங்கையின் கோட்டை அரசுக்கு எதிராக ஒரு தரைப் போரை நடத்தினார். சீனப் பேரரசை அவமதித்த குற்றத்திற்காக தென்னிலங்கை மன்னன் வீர அழகேஸ்வராவைக் கைது செய்து சீனாவுக்குக் கொண்டு சென்றார்.
அவர் மேற்கொண்ட ஏழு பயணங்களின் விபரம் பின்வருமாறு!
முதலாவது 1405 முதல் 1407 வரை. தொட்ட இடங்களில் ஒரு சில ஜாவா, மலாக்கா, காயல்பட்டினம், கொச்சி, கோழிக்கூடு, இலங்கை.
இரண்டாவது 1407 முதல் 1409 வரை தொட்ட இடங்களில் ஒரு சில ஜாவா, மலாக்கா, இலங்கை, தமிழகம்.
முன்றாவது 1409 முதல் 1411 வரை தொட்ட இடங்களில் ஒரு சில ஜாவா, சுமத்திரா, மலாக்கா, இலங்கை, கொச்சி, கோழிக்கூடு.
நான்காவது 1413 முதல் 1415 வரை தொட்ட இடங்களில் ஒரு சில ஜாவா , மலாக்கா, இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா, கென்யா, உகான்டா, ஏடன் (Aden)
ஐந்தாவது 1416 முதல் 1419 வரை தொட்ட இடங்களில் ஒருசில மலாக்கா, இலங்கை மாலைதீவுகள், ஏடன்.
ஆறாவது 1421 முதல் 1422 வரை தொட்ட இடங்களில் ஒரு சில வேஹார்முஸ் சவுதி அரேபியத் தீபகற்ப நாடுகள்.
ஏழாவது 1430 முதல் 1433 வரை தொட்ட இடங்களில் ஒரு சில சம்பா, ஜாவா, சுமத்திரா, இலங்கை, காயல்,  கொச்சி, கோழிக்கூடு.
ஆறாவது பயணம் தவிர்ந்த பிற பயணங்கள் அனைத்திலும் அவர் இலங்கைக்குச் சென்றார். காலித் துறைமுகம் அந்தக் காலக் கடற்பயண மையமாக இருந்தது. 1410ம் ஆண்டு செங் ஹீ காலியில் ஒரு மும்மொழிக் கற்பலகையை நாட்டினார். முதலில் சீனத்திலும் இரண்டாவதாகத் தமிழிலும் மூன்றாவதாக பாரசீக மொழியிலும். அந்த கற்பலகையில் ஒரு செய்தி பொறிக்கப்பட்டது.
சிவனொளிபாத மலையில் வீற்றிருந்த புத்த தெய்வத்திற்கு சீன அரசு சார்பில் வழங்கிய தங்கம், வெள்ளி, பட்டுத் துணிகள் வாசனை எண்ணைகள் போன்ற காணிக்கைகள் பற்றிய விபரம் மும்மொழியில் பொறிக்கப்பட்டது. இந்து மாகடல் வர்த்தக மொழியான தமிழ் அதில் சீனத்திற்கு அடுத்ததாக இடம்பெற்றது.
தொண்டேஸ்வரம் தேவிநுவர நாயனார் சிவன் கோவிலுக்குச் செய்யப்பட்ட கொடைகள் பற்றியும் அந்தக் கற்பலகையில் பொறிக்கப்பட்டது. இந்தக் கற்பலகை பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் 1911ம் ஆண்டு காலி நகரில் மீட்கப்பட்டது. ஒரு கழிவு நீர் வாய்க்கால் மூடியாக அது பயன்படுத்தப் பட்டிருந்தது.
அதனுடைய மூலப் பிரதியைக் கொழும்பு பழம் பொருள் காப்பகத்திலும் (Colombo  museum) அதன் நகலைக் காலி கடல்சார்ந்த பொருட் காப்பகத்திலும் காணலாம. செங் ஹீ பயணங்களின் மூலம் இன்றைய கேரளத்திற்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கத் தொடர்பு ஏற்பட்டது.
கேரள மண்ணில் விளைந்த மிளகு உட்பட பல உணவுச் சரக்குகளைச் சீன வர்த்தகர்கள் கொள்வனவு செய்தார்கள். இனக் கலப்பு நடந்திருப்பதற்கான சான்றுகள் உள்ளன. அங்கு பயன்படும் ஒரு வகை மீன் வலை சீனவலை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
அன்றைய சீனப் பேரரசு இந்துமா கடலை மேற்கு கடல் (Western ocean) என்று அழைத்தது. அவர்கள் தயாரித்த வரைபடங்களும் அப்படிக் கூறுகின்றன. இன்றைய அளவீடுகளின்படி செங் ஹீயின் ஏழு பயணங்களின் மொத்தத் தூரம் 50.000 கி.மீ அல்லது 30,000 மைல் என்று மதிப்பிடப்படுகிறது.
முதலாவது பயணத்தில் சென்ற கப்பல்கள், இராணுவத்தினர், மாலுமிகள் பற்றிய பதிவுகள் சீனாவில் உள்ளன. 27,800 மாலுமிகளும் படைகளும் 62 பெரிய கப்பல்கள் , 190 சிறிய ரகக் கப்பல்கள், போர்க் கப்பல்கள், ஒரு மாதத்திற்குப் போதுமான குடிநீர் காவும் கப்பல், மரக்கறி பயிரிடுவதற்கான மண் நிரப்பிய கப்பல் என்பனவும் ஒரு சேரப் பயணித்தன.
வரைபடம் தயாரிப்போர், வானசாஸ்திரிகள், வரவு செலவுக் கணக்குப் பதிவாளர்கள், காவலர்கள் என்போருடன் பாலியல் தேவைக்காகப் பெண்களும் இந்தக் கப்பல் அணியில் கொண்டு செல்லப்பட்டனர். செங் ஹீ இறுதிப் பயணத்தின் போது 1433ல் காலமானார். அவருடைய உடல் கடலில் இறக்கப்பட்டது.
சீனாவின் பெரிய ரகக் கப்பல் இன்றைய அளவீடுகளின்படி 416 அடி நீளமும் (126.73 மீற்றர்) 170 அடி அகலமும் (51.84 மீற்றர்) கொண்டவையாக இருந்தன. தற்கால உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு நிகரானது. ஏழு பயணங்களில் சென்ற கப்பல் அனைத்தும் மரத்தில் செய்யப்பட்டவை. வரலாற்றில் இந்தளவு பருமனில் மரக் கப்பல்கள் உருவாக்கப் படவில்லை என்று அறியப்படுகிறது.
செங் ஹீயின் மரணமும் மிங் பேரரசின் கடல் பயணங்களை நிறுத்தும் உள்நாட்டுக் காரணங்களுக்கான கொள்கையும் இந்துமா கடலில் சீனக் கப்பல்களின் சஞ்சாரம் 1433ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தற்கால வரலாற்றாசிரியர்கள் வேறு வித முடிவு கட்டியுள்ளனர்.
இந்து மாகடலில் 19ம் நூற்றாண்டு வரை சீனக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கும் கிழக்கு ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்குத் துறைமுகங்களுக்கும் வர்த்தக நிமித்தம் சென்று திரும்பியதாக நவீன வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
மனித வரலாற்றில் மிகப் பெரிய கடலோடிகளில் ஒருவரான செங் ஹீ பேர்டினன்ற் மகலனுக்கு (Ferdinand Magellan) முன்பே பூமியைச் சுற்றிக் கடற் பயணம் மேற்கொண்டதாக கவின் மென்சிஸ் (Gavin Menzies) என்ற ஆங்கிலேயர் 2002ல் ஒரு நூல்எழுதியுள்ளார்.
நூலின் தலைப்பு 1421, சீனா உலகைக் கண்டு பிடித்த ஆண்டு. (1421 the year china discovered the world. transworld publication 2002) ஆசிரியர் மென்சிஸ் பிரிட்டிஸ் நீர் முழ்கிக் கப்பல் கொமாண்டராகப் பதவி வகித்து இளைப்பாறியவர்.
வாசிப்பதற்குச் சுவையான நூலாக இருந்தாலும் செங் ஹீ பூமியைச் சுற்றிக் கடற் பயணம் மேற்கொண்டார் என்ற கூற்றை உலகின் முன்னணி வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கத் தயாரில்லை. ஆனால் செங் ஹீ தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு, கிழக்கு ஆபிரிக்கா, ஆகியவற்றை வலம் வந்தார் என்பது நன்கு உறுதி செய்யப்பட்ட விடயம்.
அனைத்துலக செங் ஹீ ஆய்வகத்தின் தலைவர் தான் தா சென் (tan ta sen) சீனாவில் இருந்து கருத்துத் தெரிவிக்கையில் மென்சிஸ் நூலை நாங்கள் வரலாற்று ஆவணமாக ஏற்கவில்லை. எமது ஆய்வின்படி செங் ஹீ கிழக்கு ஆபிரிக்காவுக்கு அப்பால் செல்லவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக